↓முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
தூய மரியன்னை தமிழ்க் கழகம் பாப்பிறை குருமடம், புனே

கழகச் செயல்பாடுகள்

மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில், கழகத் திருப்பலி மூலம் குரு மாணவர்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தி வருகிறது.

குரு மாணவர்களின் சிந்தனைக் கருவூலமாக, அவர்களின் ஆக்கப்பூர்வமான எழுத்துத் திறமைக்கு வடிகாலாக “நிலா” என்ற இலக்கிய இதழ் தொடர்ந்து ஒளிர்ந்து வருகிறது. இந்த நிலா இலக்கிய இதழ் தமிழ்க் கழகத்திற்கும் தன் பாசமிகு குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் நிலாவின் நீங்காத நினைவுகளாகப் பதிவாகியுள்ளன.

தமிழ்க் கலையையும் பண்பாட்டையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் நம் தமிழ்க் கழகம் தனித்துவமான பங்களிப்பை ஆற்றி வருகின்றது. குறிப்பாக, 90-களுக்கு முன்புவரை நம் தமிழ்க் கழகத்தின் சார்பாக ஆண்டுதோறும் பொங்கல் விழாவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கலை நிகழ்ச்சிகளும், நாடகமும் அரங்கேற்றப்பட்டன. இவ்வாறு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆண்டுகளில், பொங்கல் விழாவும் இணைந்து கொண்டாடப்பட்டதால், அந்த ஆண்டுகளில் கழகம் இரண்டு சிறப்பான நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழங்கி வந்தது.

காலச்சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, பின்னாளில் இக்கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாடக அரங்கேற்றங்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன. இன்றும் இந்நிகழ்ச்சிகள் சகோதரர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் ஆளுமையை ஊக்குவித்து வளர்க்கும் சிறந்த களமாகத் திகழ்கின்றன. அந்த வகையில், கடந்த 2024–2025-ஆம் கல்வி ஆண்டில் “அறம்” என்ற உயரிய கருப்பொருளை மையமாகக் கொண்டு கழகம் தனது கலைநிகழ்ச்சிகளைச் சிறப்புற வழங்கியது. வருகின்ற கல்வி ஆண்டிலும், தமிழின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளையும், நாடகத்தையும் அரங்கேற்றம் செய்ய ஆவலாய் உள்ளது.

கோடைகால மற்றும் உயிர்ப்பு பெருவிழாக் காலங்களில் மறைப்பணிக்குச் செல்லும் சகோதரர்களுக்குப் பெருந்துணையாக இருக்கும் வகையில், 90-களில் இறையியல் சகோதரர்கள் ஒன்றுகூடி சிலுவைப்பாதைச் சிந்தனைகளையும், தியானங்களையும் தயாரித்து வழங்கி வந்தனர். அதேபோன்று, புனித வார வழிபாடுகளைச் சிறப்பாகவும், பக்தி உணர்வுடனும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், வழிபாட்டுப் பாடல்களுக்கான சிறப்புப் பயிற்சிகளையும் கழகம் ஒருங்கிணைத்து வருகின்றது. இவ்வாறு, சகோதரர்களின் ஆன்மீகத் தயாரிப்பிற்கும் மறைப்பணித் திறன் வளர்ச்சிக்கும் நம் தமிழ்க் கழகம் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குரு மாணவர்கள் தங்களை எதிர்காலத் தமிழ்க் குருத்துவப் பணிக்குத் தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் மேடைப்பேச்சு மற்றும் மறையுரைப் பயிற்சிகளும் கழகத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆண்டுதோறும் இலக்கிய அமர்வு கூட்டங்களும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.

சிறு விதையாய் நடப்பட்டு பல இடர்கள் மற்றும் இன்னல்களைக் கடந்து இன்று வரை மிகவும் துடிப்பாய் பணியாற்றி வரும் நம் கழகத்தை கடந்த ஆண்டுகளில் தன் இடைவிடாத பரிந்துரையால், கண்ணின்மணி என காத்து வரும் நம் அன்னை மரியாவுக்கு நன்றி கூறும் வகையில், ஆண்டுதோறும் அவர் பிறந்த நாளாம் செப்டம்பர் 8-ஆம் நாளில் கழகத்தின் திருவிழாவை, நம் கழகம் சீரும் சிறப்புமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளில் தமிழரின் மரபையும், கலாச்சாரத்தையும் மறக்காமல் நினைவு கூறும் வகையிலும், தமிழரின் பண்பாட்டுக் கலைகளைப் போற்றும் வகையிலும் நடனம், சிறிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் 19 வகையான பாரம்பரிய உணவுடன், அன்னைத் தமிழின் அறுவடைத் திருநாளான பொங்கல் குருமடத்தில் வருடம் தோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பங்குகளில் மேய்ப்புப்பணி

மதுரைக்கு நிகராய் மராட்டிய மண்ணில் மகுடம் சூடிய தமிழ்க் கழகம் தன்னை குருமடத்தின் நான்கு சுவருக்குள் சுருக்கிக் கொள்ளாமல் கீழ்க்காணும் பத்துக்கும் மேற்பட்ட பங்குகளில் பணியாற்றி வருகிறது:

பங்குகள்
ராம்வாடிகட்கி
ஷான்வாடிசோலாப்பூர் பஜார்
கோர்புரிஷைனிக்வாடி
தெகுரோடுசின்சுவாடு
தாராவிவானாவோரி

இப்பங்குகளில், நம் மரியன்னை தமிழ்க் கழகத்தின் பாசமிகு குழந்தைகள் ஞாயிறு திருவழிபாடுகளில் இறைவார்த்தை போதித்தும், ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்து பிறப்பு காலம், தவக்காலம் மற்றும் இதர பங்குத் திருவிழாக்களின் திருவழிபாட்டிற்கான பாடல் பயிற்சிகளை ஒருங்கிணைத்தும், வருடம் தோறும் மராட்டிய மண்ணில் வாழும் தமிழ் நெஞ்சங்களை ஒன்றிணைக்கும் வகையில் பங்குகளில் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாட்டத்தை முன்னின்று சிறப்பாக வழிநடத்தியும், மேலும் திரு இருதய ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட மாதமான ஜூன் மாதத்திலும், ஜெபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட செப்டம்பர் மாதத்திலும் குடும்பங்களைச் சந்தித்து அவர்களோடு ஜெபித்து அவர்களின் ஆன்மீக வாழ்விற்கு வலு சேர்த்து, திரு இருதய ஆண்டவரின் அருளைப் பெற்றுத் தரும் கருவிகளாகவும் திகழ்கின்றார்கள்.